பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்

நாமக்கல்லில் நேற்று ஆயுதபூஜையையொட்டி பூஜை பொருட்கள் மற்றும் பூசணிக்காய் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
Published on

ஆயுதபூஜை

ஆயுதபூஜை பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாமக்கல்லில் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், லாரி பட்டறைகளை சுத்தம் செய்யும் பணி நேற்று முழுவீச்சில் நடைபெற்றது.

மேலும் பூஜையில் இடம்பெறும் பொரி, கடலை, வெல்லம் போன்ற பொருட்களின் விற்பனை மும்முரமாக இருந்தது. இதற்காக சாலை ஓரங்களில் ஆங்காங்கே தற்காலிக கடைகள் போடப்பட்டு இருப்பதை காண முடிந்தது. இந்த கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கடந்த ஆண்டு சுமார் 7 கிலோ கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.550-க்கு விற்பனையானது. இந்த ஆண்டு அது மூட்டைக்கு ரூ.100 அதிகரித்து ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கடந்த ஆண்டு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலக்கடலை இந்த ஆண்டு ரூ.170-க்கும், ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட பொட்டுக்கடலை ரூ.100-க்கும் விற்பனையானது.

குறிப்பாக நாமக்கல் மெயின்ரோடு, திருச்சி ரோடு, சேலம் ரோடு, உழவர்சந்தை பகுதிகளில் அதிக அளவில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஆயுதபூஜையையொட்டி லாரி பட்டறைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அலங்காரம் செய்ய தேவையான அலங்கார பொருட்கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

பூசணிக்காய் விற்பனை

இதேபோல் ஆயுதபூஜை நாளில் பூஜைகளை முடித்து கொண்டு திருஷ்டி கழிப்பதற்காக பூசணிக்காய் உடைப்பதும் வழக்கம். எனவே பூசணிக்காயும் அதிக அளவில் சாலை ஓரங்களில் விற்பனைக்காக குவிக்கப்பட்டு இருந்தன. இவற்றை திருச்சி மாவட்டம் மற்றும் பழனியில் இருந்து வாங்கி வந்து, வியாபாரிகள் விற்பனைக்கு வைத்து இருந்தனர். இவை அவற்றின் தரத்தை பொறுத்து ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டன. இவற்றையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது. இந்த பூசணிக்காய்களை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் உடைக்க வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com