வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

கோப்புப்படம்
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் சமூக மக்களுக்கான மேல்நிலை நீர்த்தொட்டியில் சமூக விரோதிகள் மனித மலம் கலந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்துத் தொடர்ந்த வழக்கு, எந்த முன்னேற்றமும் இன்றி, இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. தற்போது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேரையே குற்றவாளிகள் என்று தி.மு.க. அரசு கூறியிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
கடந்த டிசம்பர் 2022 அன்று. மேல்நிலை நீர்த்தொட்டியிலிருந்து தண்ணீரைப் பயன்படுத்திய பட்டியல் சமூக மக்களுக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவப் பரிசோதனையில், மக்கள் பயன்படுத்திய குடிநீர் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்தது. இதனை அடுத்து. வேங்கைவயல் கிராமத்து இளைஞர்கள் சிலர். மேல்நிலை நீர்த்தொட்டியில் ஏறிப் பார்த்தபோது, தண்ணீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டறிந்தனர். மேலும், மேல்நிலை நீர்த்தொட்டியின் உள்ளே கழிவுகள் மிதப்பதையும் கண்டறிந்தனர்.
உடனடியாக, வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், 26.12.2022 அன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர், விசாரணை என்ற பெயரில், பட்டியல் சமூக இளைஞர்களையே தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
எனவே, பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதில் தொய்வு காட்டிய காவல்துறைக்கும், தி.மு.க. அரசுக்கும் எதிராகப் போராட்டங்களை நடத்தினர். பொதுமக்கள் போராட்டத்திற்குப் பிறகு, இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றியது தி.மு.க. அரசு. ஆனாலும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
குற்றம் நடைபெற்று சுமார் 750 நாட்கள் ஆகின்றன. இத்தனை நாட்களும் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் வழக்கு விசாரணையில் இல்லை. தொடக்கம் முதலே, வழக்கு விசாரணையின் போக்கு முறையானதாக இல்லை. முன்னுக்குப்பின் முரணாக தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. மாண்புமிகு சென்னை ஐகோர்ட்டு விதித்த காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாக, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கால அவகாசம் வேண்டும் என்று காவல்துறை மனுத்தாக்கல் செய்த நிலையில், அவசர அவசரமாக, பட்டியல் சமூக இளைஞர்கள் மூன்று பேர் மீதே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாகக் கூறுவது. பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
தி.மு.க. அரசின் கீழ் நடக்கும் இந்த விசாரணையின் மீது, பொதுமக்களுக்கு துளியளவு நம்பிக்கையும் இல்லை. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதுதான் தி.மு.க. அரசின் நோக்கமாகத் தெரிகிறது. எனவே, இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கில், மாண்புமிகு சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை. சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.க.வின் நிலைப்பாடு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வேங்கைவயல் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. , விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.