‘இயற்கை, கலாசாரத்தை வருங்காலத்துக்காக பாதுகாக்க வேண்டும்’ வெங்கையா நாயுடு பேச்சு

இயற்கை, கலாசாரத்தை வருங்காலத்துக்காக பாதுகாக்கவேண்டும் என்று சென்னையில் நடந்த விழாவில் வெங்கையா நாயுடு பேசினார்.
‘இயற்கை, கலாசாரத்தை வருங்காலத்துக்காக பாதுகாக்க வேண்டும்’ வெங்கையா நாயுடு பேச்சு
Published on

சென்னை,

மறைந்த பிரபல கர்நாடக இசை பாடகி டி.கே.பட்டம்மாள் நூற்றாண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபா அரங்கில் நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

டி.கே.பட்டம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், பாடகியுமான நித்யஸ்ரீ மகாதேவன் வரவேற்புரையாற்றினார். கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ வானவராயர், பிரபல பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

மாபெரும் இசை கலைஞரான டி.கே.பட்டம்மாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இசை, நாட்டியம் உள்ளிட்ட நுண்கலைகளின் நீண்ட பாரம்பரியம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. வெறும் பணம் என்பதற்கு அப்பாலும் வாழ்க்கையில் ஏராளமாக உள்ளது. இசை என்பது காலவரம்பற்ற ஒன்று. அது நம்முடைய வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துகிறது.

சிறந்த இசை என்பது நமது ஆத்மாவில், உள்ளுணர்வில் எப்போதும் பதிந்த ஒன்றாக விளங்குகிறது. நாம் அனைவருமே இந்த செறிவான பாரம்பரியத்தை பெற்ற வாரிசுகளாக இருக்கிறோம். டி.கே.பட்டம்மாளை போன்ற மகத்தான இசைக் கலைஞர்களால் அது தொடர்ந்து செழுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற சூழலில், இசைதான் நமக்கு மிகவும் தேவைப்படுகின்ற இயற்கையான மருந்து. கலாசாரமும், தாய்மொழியும் ஒரு சேர பயணிக்கும். தாய்மொழி கண் போன்றது. பிற மொழி கண்ணாடி போன்றது. கண்ணாடியால் பார்ப்பதை விடவும், கண்ணால் தெளிவாக பார்க்க முடியும். அதனால் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழியில் பேச கற்றுக்கொடுக்கவேண்டும்.

அம்மா என்ற வார்த்தைக்கு நிகர் வேறு எதுவும் கிடையாது. அதேபோல நாட்டில் அதிகம் பேசப்படும் இந்தி உள்ளிட்ட மொழிகளையும் கற்றுக்கொள்ளவேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நானும் பங்கேற்றவன் தான். பின்னர் தான் இந்தியின் முக்கியத்துவம் குறித்து உணர்ந்தேன்.

இசை, கலாசாரம், பாரம்பரியம், சுதந்திர போராட்டம் என தமிழகத்தில் இருந்து நாட்டுக்கு கிடைத்த பங்களிப்புகள் ஏராளம். எனவே நம்முடைய இயற்கை, கலாசாரம் ஆகியவற்றை வருங்காலத்துக்காக பாதுகாக்கவேண்டும். அமைதி, நல்லிணக்கம், புரிதல், நல்லெண்ணம் ஆகியவற்றை டி.கே.பட்டம்மாளின் இனிமையான இசை உலகமெங்கும் பரவச்செய்யட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக டி.கே.பட்டம்மாளின் மகன்கள் சிவக்குமார், லட்சுமணக்குமார் ஆகியோர் வெங்கையா நாயுடுவுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர். விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத், டி.கே.பட்டம்மாளின் பேத்திகள் லாவண்யா, தேஜஸ்ரீ உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com