வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு..!

வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது.
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு..!
Published on

சென்னை,

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, 1992 ஜூன் 20-ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அங்கிருந்த இளம் பெண்கள் 18 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் என்று 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என 2011ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வாச்சாத்தி மலை கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது நீதிபதி வேல்முருகன் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com