

சென்னை,
சட்டமன்ற தேர்தல்களில் சென்னை கொளத்தூர் தொகுதியில் (2011, 2016, 2021) 'ஹாட்ரிக்' வெற்றியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்திருந்தார். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு எந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மு.க.ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் கொளத்தூர் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது. தி.மு.க. முகவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இன்று முதல் 7 நாட்களுக்கு இப்பணி நடைபெறும் என்றும் ஒவ்வொரு நாளும் 2 வாக்குச்சாவடிகளுடைய எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல புகார்கள் வந்துள்ள காஞ்சீபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.