மிக கனமழை எச்சரிக்கை: நீலகிரி சென்ற தேசிய பேரிடர் மீட்பு படை

மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரிக்கு சென்றுள்ளனர். தயார் நிலையில் 456 பாதுகாப்பு மையங்கள் உள்ளன.
மிக கனமழை எச்சரிக்கை: நீலகிரி சென்ற தேசிய பேரிடர் மீட்பு படை
Published on

ஊட்டி,

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நேற்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நீலகிரியில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்க அரக்கோணத்தில் இருந்து கமாண்டன்ட் பிரவீன் எஸ் பிரசாத் தலைமையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 43 பேர் நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சென்றனர். அவர்கள் ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் இரு பிரிவாக பிரிந்து பணியாற்ற உள்ளனர்.

முன்னதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மலை பாதிப்புகளை சமாளிப்பது குறித்த முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

283 இடங்கள்

தென்மேற்கு பருவமழை தொடர்பாக நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டு உள்ளன. இந்த பகுதியினை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க ஏதுவாக, 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை, குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 3,500 முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் 200 பேரிடர் கால நண்பர்களுக்கு பேரிடர் பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com