முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-
முதுபெரும் எழுத்தாளர் குறிஞ்சிச்செல்வர் கொ.மா. கோதண்டம் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். எளிய குடும்பத்தில் பிறந்து பஞ்சாலைத் தொழிலாளராக தமது வாழ்வைத் தொடங்கிய திரு. கோதண்டம் அவர்கள், அதே எளிய மக்களுக்கான எழுத்தின் மூலமாக இலக்கிய உலகில் தடம்பதித்த மிகச்சிறந்த படைப்பாளி. அதுமட்டுமின்றி சிறார்களுக்கான இலக்கியப் படைப்புகளிலும் பெரும் பங்களிப்பைச் செய்து, இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
பால சாகித்திய விருது, ஜனாதிபதி விருது, தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருது எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இவரது நூல்கள், கடந்த 2025 ஏப்ரல் 5 அன்று நமது திராவிட மாடல் அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன என்பதையும் நினைவுகூர்கிறேன்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த எழுத்தாளர் கொ.மா. கோதண்டம் அவர்களின் மறைவு கலை, இலக்கிய உலகிற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






