வெற்றி பயணம் திட்டம் விரிவாக்கம்... 340 பஸ்கள் சாதாரண கட்டணத்துக்கு மாற்றம்!

ஆண் பயணிகளுக்கு ரூ.10 முதல் ரூ.16 வரை கட்டணம் குறைந்துள்ளது.
வெற்றி பயணம் திட்டம் விரிவாக்கம்... 340 பஸ்கள் சாதாரண கட்டணத்துக்கு மாற்றம்!
Published on: 

சென்னை:

மகளிருக்கான வெற்றி பயணம் திட்டத்தின் கீழ், மாவட்டங்களில் இயக்கப்படும் 340 விரைவு மற்றும் சொகுசு புறநகர் அரசு பஸ்கள் சாதாரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், அந்த பஸ்களில் பயணம் செய்யும் ஆண் பயணிகளுக்கு ரூ.10 முதல் ரூ.16 வரை கட்டணம் குறைந்துள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் சாதாரண கட்டண அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச பயணத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தற்போது 'வெற்றி பயணம்' என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பஸ்களில் அதிகரிக்கும் கூட்டம்

இந்த திட்டத்தின்படி, மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண, சொகுசு பஸ்களிலும், மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் புறநகர் மற்றும் மலைப்பகுதி பஸ்களிலும் மகளிர் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால், சென்னையில் சொகுசு மாநகர பஸ்களிலும், மாவட்டங்களில் புறநகர் சாதாரண கட்டண பஸ்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பஸ்களை பயணிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில், அவற்றில் 'வெற்றி பயணம்' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதுடன், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

340 பஸ்களில் கட்டணம் குறைப்பு

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-

மாநகர விரைவு மற்றும் சொகுசு பஸ்கள், புறநகர் சாதாரண கட்டண பஸ்கள் மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட தொலைவுக்கு இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரண கட்டண பஸ்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 695 பஸ்களில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இதில், மாவட்டங்களுக்கு இடையேயும் முக்கிய நகரங்களுக்கு இடையேயும் இயக்கப்படும் 2,390 புறநகர் சாதாரண கட்டண பஸ்களும் அடங்கும்.

இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன்பு 2,050 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது கூடுதலாக 340 விரைவு மற்றும் சொகுசு புறநகர் பஸ்கள் சாதாரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன.

இதனால், இந்த பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பயணிக்கும் தூரத்தைப் பொறுத்து ரூ.10 முதல் ரூ.16 வரை கட்டணம் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com