"வெற்றித் தறி" மின் வணிகத்தளம்: முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்

சிறந்த நெசவாளர், வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.
"வெற்றித் தறி" மின் வணிகத்தளம்: முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். மேலும், 2025–2026ம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 11 விருதாளர்களுக்கு 22.25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் நாளன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ம் நாள் தேசிய கைத்தறி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களின் கலாசார, சமூக மற்றும் பொருளாதாரப் பங்களிப்பைப் போற்றும் நோக்கத்துடன் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தல்

தமிழ்நாட்டின் வளமான கைத்தறிப் பாரம்பரியத்தைப் போற்றவும், மாநிலத்தின் கலாசார மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நெசவாளர் சமூகத்தின் பங்களிப்பைக் கவுரவிக்கவும், தமிழ்நாடு கைத்தறித் துறை சார்பில் முதல்-அமைச்சர் தலைமையில் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், இன்று (7.8.2026) முதல் 13.8.2026 வரை ஏழு நாட்கள் நடைபெறும் HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்திசெய்யும் உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம், ஆரணி மற்றும் திருபுவனம் பட்டுச் சேலைகள், கோவை கோரா பருத்திச் சேலைகள், நெகமம் பருத்திச் சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், வீட்டு உபயோக ஜவுளி வகைகள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறித் தயாரிப்புகளுடன், பிற மாநிலங்களின் தந்துஜா, மிருக்ணாயினி, குஜ்ஜாரி, பயோனிகா போன்ற புகழ்பெற்ற கைத்தறித் தயாரிப்புகளும் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகள் வழங்குதல்

இவ்விழாவில், சிறந்த கைவினைத்திறன், புதுமை மற்றும் தமிழ்நாட்டின் கைத்தறி மரபைப் பாதுகாப்பதில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக, 2025–2026ம் ஆண்டிற்கான மாநில அளவில் பட்டு ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை கும்பகோணம், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ்.எல்.பி. சுரேசுக்கும், இரண்டாம் பரிசினை காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் மாணிக்கம் முனுசாமிக்கும், மூன்றாம் பரிசினை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ். ஜெயஸ்ரீக்கும்;

பருத்தி ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை பரமக்குடி, முருகன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் இ.ஆர்.நாகலம்மாளுக்கும், இரண்டாம் பரிசினை சேலம், மேற்கு வனவாசி தொடக்க பருத்தி மற்றும் சுத்தப்பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பெ. ராஜகணபதிக்கும், மூன்றாம் பரிசினை சேலம், திருவள்ளுவர் தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் மோகனுக்கும்;

மாநில அளவிலான சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசினை திருவாரூர், கூறைடெக்ஸ் பருத்தி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பத்மாவதி திருமலைராயனுக்கும், இரண்டாம் பரிசினை கும்பகோணம், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம். மகேஷ்குமார் மற்றும் திருவண்ணாமலை, ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் வி. பார்த்திபனுக்கும், மூன்றாம் பரிசினை திருப்பூர், கோவில்வழி பருத்தி மற்றும் பட்டு தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் என். கார்த்திக் மற்றும் திருச்செங்கோடு, ராசிபுரம் பட்டு தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம். பிரேமாவுக்கும் என 9 விருதுகளை 11 விருதாளர்களுக்கு மொத்தம் 22 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கிச் சிறப்பித்தார்.

"வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்தல்

தமிழ்நாடு அரசின் "வெற்றித் தமிழகம்" தொலைநோக்குத் திட்டங்களின் ஒரு பகுதியாக, தமிழக நெசவாளர்களின் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் நோக்கில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தினை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், சென்னையிலுள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் (NIFT) உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கருப்பொருள் காட்சி அரங்கில், மாநில அளவில் விருதுபெற்ற நெசவாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் உருவாக்கிய கைத்தறித் தயாரிப்புகள் மற்றும் புவிசார் குறியீடு (GI) பெற்ற தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், பவானி ஜமக்காளம், மதுரை சுங்குடி சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், கோவை கோரா காட்டன் சேலைகள், ஆரணி பட்டுச் சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், காரைக்குடி கண்டாங்கிச் சேலைகள், நெகமம் பருத்திச் சேலைகள், வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள், உறையூர் பருத்திச் சேலைகள் ஆகிய 11 கைத்தறி ரகங்கள் அழகுற காட்சிப்படுத்தப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com