கவர்னர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு: சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல் - திருமாவளவன்

ஆர்.என்.ரவியை உடனடியாக கவர்னர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஏப்ரல் 25, 26 ஆகிய நாட்களில் நீலகிரியில் உள்ள கவர்னர் மாளிகையான "ராஜ்பவனில்" தமிழ்நாட்டில் உள்ள 45 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் மாநாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் எனவும், அதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் கவர்னரின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்நாடு அரசு 10 பல்கலைக்கழக மசோதாக்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கில் கடந்த 8-ம்தேதி அரசமைப்புச் சட்ட உறுப்பு-142ன் மூலம் பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து சட்டமாக்கியது சுப்ரீம் கோர்ட்டு. இந்த சட்டங்களின் மூலம் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் முதல்-அமைச்சரிடமே இப்போது உள்ளது. அதனடிப்படையில் கடந்த 16-ம்தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

மசோதாக்களை கிடப்பில்போடுவது சட்டவிரோதமானது என கவர்னரின் போக்கை சுப்ரீம் கோர்ட்டு கண்டித்த பின்னரும் கூட அரசமைப்புச் சட்டத்தையும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் துளியும் மதிக்காமல் மீண்டும் குழப்பத்தை உண்டு பண்ணும் வகையில் அடாவடித்தனமாகவும் சட்டவிரோதமாகவும் செயல்படும் கவர்னரின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சுப்ரீம் கோர்ட்டு சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது என அண்மையில் ஜனநாயகத்தின் மீதான தனது வன்மத்தைக் கக்கிய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இம்மாநாட்டில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. அவர் மேற்குவங்க கவர்னராக இருந்தபோது ஆர்.என்.ரவியைப் போலத்தான் மசோதாக்களை கிடப்பில் போட்டு மாநில அரசை முடக்கினார். அரசமைப்புச் சட்டத்தின்மீது கொஞ்சமும் மதிப்பில்லாதவர்தான் இந்த ஜெகதீப் தன்கர். அவர் ஆர்.என்.ரவியோடு கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டில் குழப்பம் விளைவிக்க முனைந்திருக்கிறார்.

கவர்னரின் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டைத் தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாகத் தடுத்து நிறுத்த வேண்டும். கவர்னர் பதவிக்காலம் முடிந்த பிறகும் வெட்கம் சிறிதுமின்றித் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஒட்டிக்கொண்டு, சனாதனப் பிரிவினைவாதக் கருத்துகளைப் பரப்பிவரும் ஆர்.என்.ரவியை உடனடியாக கவர்னர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com