

சென்னை,
அகில இந்திய தெலுங்கு பவுண்டேஷன் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 258-வது ஜெயந்தி விழா மற்றும் தியாகராஜரின் 250-வது ஜெயந்தி விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப்ரெட்டி தலைமை தாங்கினார். அமைப்பின் தலைவர் சி.எம்.கே.ரெட்டி வரவேற்றார்.
விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
உயர்ந்த இடத்தை அடையலாம்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசும்போது கூறியதாவது:-
வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர். அதேபோன்று கீர்த்தனைகள் எழுதியதில் தியாகராஜர் புகழ்பெற்று விளங்கினார். இவர்களது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதை பெரும்பாக்கியமாக கருதுகிறேன். இந்திய நாடு சாதி, மதம், மொழிகளை கடந்த நாடாக தற்போது வரை திகழ்ந்து வருகிறது.
ஒவ்வொருவரும் தாய் மொழியில் நன்கு புலமை பெற வேண்டும். அப்படி புலமை பெற்றால் உயர்ந்த இடத்தை அடையலாம். தாய் மொழியில் படித்த பலர் இன்றைக்கு உயர்ந்த இடத்தில் உள்ளனர் என்பதை அனைவரும் நன்கு உணர வேண்டும்.
உண்மையான தேசப்பற்று
பிறமொழியையும் அறிந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலும், நமது கலாசாரத்தை பின்பற்றுவதிலும் தான் உண்மையான தேசப்பற்று உள்ளது. தீண்டாமை போன்றவை வேரறுக்கப்பட வேண்டும்.
நிர்பயாவுக்கு நடந்த கொடுமை போன்று இன்னொரு சம்பவம் இந்தியாவில் இனி எங்கும் நடக்கக்கூடாது. இதற்காக அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கை மனு
இதன்பின்பு, தெலுங்கு மொழிப்பாடத்தை தமிழக பள்ளிகளில் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைப்பின் நிர்வாகிகள் துணை ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசான பீமராஜுக்கு, துணை ஜனாதிபதி பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார். விழாவில் அமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகோபாலன், இளைஞர் பிரிவு தலைவர் சுரேஷ், மாநில செய்திதொடர்பாளர் நாகபூஷனம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.