நம் பாட்டி, அம்மா, அக்கா... நாளை முதல் வெற்றிப்பயண திட்டம் அமல்: முதல்-அமைச்சர் விஜய் பதிவு

நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.
முதல்-அமைச்சர் விஜய்
Published on: 

சென்னை

வெற்றிப்பயண திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர், மகளிர் பயனடையும் வகையிலான வெற்றிப்பயணம் என்ற பெயரிலான திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

வெற்றிப்பயணம்

இதுபற்றி ஆகஸ்டு 24-ந்தேதி அன்று சட்டமன்றப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் வசிக்கும் மகளிரும் போக்குவரத்து கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதி சிந்தனையை இவ்வரசு முதன்மையாக கொண்டுள்ளது என்றும், இதனை கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, 'வெற்றிப்பயணம்' என்ற பெயரில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

தற்போது, 7 அரசு போக்குவரத்துக்கழகங்களின் நகர சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். "வெற்றிப்பயணம்" திட்டத்தின் மூலம் இச்சேவை மாநகர, நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ் (Express), எல்.எஸ்.எஸ். (LSS), டீலக்ஸ் (Deluxe) அரசுப்பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள் (Mofussil Ordinary) மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகள் (Ghat Ordinary) ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டு, மொத்தமாக 12,692 பேருந்துகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டு வரப்படவுள்ளன.

12,692 பேருந்துகள்

இதன்மூலம், 7 அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மொத்தம் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69 விழுக்காடு), மொத்த 1,94,649 நடைகளில் (Singles) 1,65,312 நடைகள் (85 விழுக்காடு) இயக்கப்படும். நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். மேலும், "வெற்றிப்பயணம்" பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடனான (ETM) இணைப்பு பணி நிறைவடைந்துள்ளது. சோதனை மற்றும் சரிபார்ப்பு பணிகள் கடந்த 25-ந்தேதி அன்றும், சோதனை ஓட்டம் கடந்த 27-ந்தேதி அன்றும் மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் தமிழக மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொது போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். மேலும், மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், மகளிர் தங்கள் பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.

நாளை அமல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) நடைமுறையில் உள்ளதால், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) விலக்கி கொள்ளப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

வெற்றிப்பயணம் திட்டத்தினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் அக்டோபர் 2-ந்தேதி (நாளை) தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று வெளியிட்ட சமூக ஊடக செய்தியில், மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தினை விரிவுப்படுத்தி, பெருமளவில் பயனளித்திடும் வகையில், வெற்றிப்பயணம் என்ற பெயரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப்பயணம் திட்டம் அக்டோபர் 2 முதல் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com