

சென்னை,
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, நேற்று மகா தீபம் ஏற்றப்பட்டது. இதை காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் மலைக்கு கீழே திரண்டு இருந்தனர். தீபம் ஏற்றப்பட்டபோது அவர்கள் விண் அதிர 'அரோகரா' கோஷம் எழுப்பினர். இந்த காட்சிகள் தொலைக்காட்சிகள், இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.
மேலும் வீடியோ கிளிப்புகளும் பகிரப்பட்டன. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் திருப்பரங்குன்றம் மலை தீபமே டிரெண்டிங்கில் முக்கிய இடம் பிடித்து இருந்தது.
பல ஆண்டு சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தீபம் ஏற்றப்பட்டதைக் கண்டு பெண்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டு வழிபடும் வீடியோக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சிலர் தீபம் ஏற்றப்பட்ட தருணத்தில், தங்கள் தொப்பிகளைக் கழற்றி தீபத்தை வணங்கிய காட்சிகள் எல்லாம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின. திருப்பரங்குன்றம் மலை தீபம் என்ற ஹேஷ்டேக் நீண்ட நேரம் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தது. நேரலையில் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வண்ணம் இருந்தது.
அதாவது, திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டபோது நேரலையை பார்த்தவர்களின் எண்ணிக்கையை விட திருப்பரங்குன்றம் தீப நேரலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக இருந்தது. லைக், கமெண்டுகளும் என வலைத்தளங்களில் பக்தி மணம் வீசியது. திருப்பரங்குன்றம் தீபம் குறித்த எதிர்பார்ப்பே இந்த எண்ணிக்கையை எகிற செய்தது என்று சொல்லலாம்.