அந்த சிறையில என்ன தெரியுமா நடக்குது? தேனி சிறையில் இருந்து தப்பிய கைதி வீடியோ வைரல்

நாங்க வாழனும்னு ஆசைப்படுறோம். நீதிபதியிடம் சரணடைந்து நியாயத்தை சொல்லவே வெளில வந்தோம் என தேனி சிறையில் இருந்து தப்பிய மீனாட்சி சுந்தரத்தின் வீடியோ வைரலாகி உள்ளது.
தேனி சிறையில் இருந்து தப்பிய கைதி வீடியோ வைரல்
Published on: 

தேனி,

தேனி மாவட்டம். ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் கடந்த 26-ந்தேதி இரவு சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு. 17 கைதிகள் நுழைவு வாயில் வழியாக தப்பி ஓடினர். கைதிகள் தாக்கியதில் 3 சிறைக் காவலர்கள் காயம் அடைந்தனர்.

விசாரணையில் தப்பி ஓடியவர்கள், தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த சிலம்பரசன் (வயது 24), கம்பம் கோம்பை ரோட்டை சேர்ந்த சோலைமுகிலேஸ்வரன் (28), மதுரை மாவட்டம் சுந்தரராஜபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற மதன் (25), ராஜ்குமார் (20), காமராஜபுரத்தை சேர்ந்த திருப்பதி (23), டி.என்.எச்.பி. காலனியை சேர்ந்த பொன்முத் துச்செல்வம் (26), காந்திநகர் மேலமடையை சேர்ந்த பிரசாத் என்ற லிங்கபிரசாத் (25), ராஜா சிக்கந்தர் (24), கிழக்கு யில்குடியை சேர்ந்த நிஷாந்த் (22), வாடிப்பட்டி முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த முத்து இளங்கோவன் (22), பெருங்குடி பர்மா காலனியை சேர்ந்த பிரவீன்குமார் (25), ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த கார்த்திக்ராஜா (36), மேலஅனுப்பானடியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (25), சேலம் தடங்கப்பட்டியை சேர்ந்த சபரிநாதன் (23), சிவகங்கை மாவட்டம் கீழக்கந்தா னியை சேர்ந்த தருண்குமார் (25), ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்த பாண்டிசெல்வம் (25), கன்னியா குமரி மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்த ரெஜின் (24) ஆகியோர் என்று தெரியவந்தது.

36 மணி நேரத்தில் சிக்கினர்

தப்பி ஓடிய கைதிகள் 13 பேர் 24 மணி நேரத்துக்குள் பிடிக்கப்பட்டனர். மற்ற 4 பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அதில், மீனாட்சிசுந்தரம். திருப்பதி ஆகியோர் அண்ணன், தம்பி ஆவார்கள். அவர்கள் இருவரும் உத்தமபாளையம் போலீசாரிடம் சரண் அடையச் சென்றபோது கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் நடந்த 36 மணி நேரத்துக்குள் 17 கைதிகளும் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

தப்பி ஓடிய சம்பவத்தை தொடர்ந்து 17 பேரையும் அங்கிருந்து வெவ்வேறு சிறைகளுக்கு மாற்ற சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி முதற்கட்டமாக பிரவீன்குமார், ராஜ்குமார், லிங்கபிரசாத் ஆகிய 3 பேரும் பாளை யங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். மற்ற கைதிகள் 14 பேரையும் தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மத்திய சிறைகளுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மீதமுள்ள 14 பேரில் சேலத்துக்கு 6 பேர், கோவைக்கு 5 பேர். திருச்சி, கடலூர், பாளையங்கோட்டை சிறைகளுக்கு தலா ஒருவர் வீதம் மாற்றுவதற்கு சிறைத்து றையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தநிலையில், அந்த சிறையில என்ன தெரியுமா நடக்குது?... நாங்க எல்லாரும் தப்பிக்க இதான் காரணம்... நாங்க வாழனும்னு ஆசைப்படுறோம்.. எங்கள ஒண்ணும் பண்ணாதீங்க.. நீதிபதியிடம் சரணடைந்து நியாயத்தை சொல்லவே வெளில வந்தோம் என தேனி சிறையில் இருந்து தப்பிய மீனாட்சி சுந்தரத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உடனே சரண்டராகிவிடுகிறேன்

இதுகுறித்து அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: நான்தான் தேனி சிறையில் இருந்து தப்பிய மீனாட்சி சுந்தரம். நீதிபதிக்கும் முதல்-அமைச்சர் விஜய்க்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நாங்கள் சிறையில் இருந்து தப்பியது குற்றங்களை செய்வதற்காக அல்ல! எங்களுடன் தப்பிய கைதிகளிடம் கேட்டு பாருங்கள்.

சிறையில் நடக்கும் விஷயங்களை நீதிபதியிடம் சொல்லி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காகத்தான் நாங்கள் தப்பினோம். ஜெயிலில் இருக்கவே எங்களுக்கு பிடிக்கவில்லை. இப்போது என் வீடியோவை பார்த்துவிட்டு எந்த நீதிபதி என் உயிரை காப்பாற்றினாலும் நான் உடனே சரண்டராகிவிடுகிறேன் (போலீஸாரிடம் சிக்குவதற்கு முன்பு போட்ட வீடியோ).

எங்களை சிறையில் மிகவும் சித்ரவதை செய்தார்கள். சிறை கண்காணிப்பாளரிடமும் எங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொன்னோம். யாருமே எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறையில் இருந்து தப்பித்த அன்றைய தினம் இரவு கூட நாங்கள் சிறை காவலர்களிடம் கேட்ட போது , நீங்கள் என்ன ராஜ்ஜியம் செய்றீர்களா என கேட்டு திட்டிவிட்டு போய்விட்டார்கள்.

சாப்பாட்டில் புழு

சாப்பாடு கூட தேனி சிறையில் சரியில்லை. சாப்பாட்டில் புழு இருக்கிறது. எங்களை சித்ரவதை செய்கிறார்கள். எங்களை உறவினர்கள் வந்து பார்க்கவும் விட மாட்டேங்கிறார்கள். அவர்கள் கேட்டால், பனீஷ்மென்ட் என்கிறார்களாம். நாங்கள் சிறையில் எந்த தவறையும் செய்யவில்லை. சிறையிலேயே இருந்தால் என்னை யாராவது ஏதாவது செய்துவிடுவார்களோ என எண்ணிதான் சிறையில் இருந்து தப்பினேன்.

நான் வாழ ஆசைப்பட்டு திருந்தியிருக்கிறேன்

நீதிபதியிடம் நடந்த உண்மைகளை சொல்லி சரண்டாகிறேன். மற்றபடி போலீஸுக்கோ பொதுமக்களுக்கோ நான் இடையூறாக இருக்க மாட்டேன். என்னை சுட்டு பிடிக்க போவதாக சொல்கிறார்கள். எனக்கு திருமணமாகி எனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார். நான் வாழ ஆசைப்பட்டு திருந்தியிருக்கிறேன். என் தம்பியை முக்கிய குற்றவாளி என்கிறார்கள்.

நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை

என் தம்பிக்கு எந்த சம்பந்தமும் இல்லை. நான் செய்த தவறால் எனது மனைவி, எனது குழந்தையின் வாழ்க்கை நாசமாக போகக் கூடாது. நாங்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால்தான் தப்பினோம். கூட்டாகவே தப்பித்தோம். நானும் எனது தம்பியும் சிக்காமல் இருப்பதால் எங்கள் மீது எல்லா பழியையும் போடுகிறார்கள். நாங்கள் கூட்டமாக உட்கார்ந்திருந்ததை சிறை கேமராவில் கூட பாருங்கள். ஆனால் எங்கள் இருவர் மீது மட்டும் பழி போடுகிறார்கள். நான் வாழணும் என ஆசைப்படுகிறேன். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. இவ்வாறு மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

X