முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ - அதிமுக கண்டனம்

முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அ.தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ வெளியானது குறித்து முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"முருக பக்தர்கள் மாநாட்டிற்கு விடுக்கப்பட்ட அன்பான அழைப்பினை ஏற்று கலந்து கொண்டோம். முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே தான் கலந்து கொண்டோம். அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையோடு தான் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோம். பெரியார், அண்ணா குறித்த அவதூறான வீடியோ ஒளிபரப்பப்பட்டதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
அ.தி.மு.க. ஒருநாளும் கொள்கையையும், கட்சியின் கோட்பாடுகளையும் விட்டுக் கொடுக்காது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். ஏன் தி.மு.க.வுக்கும் நன்றாக தெரியும். ஆனால் அ.தி.மு.க. மீது அவதூறு பரப்புவதற்கு ஏதாவது சாக்குபோக்கு கிடைக்காதா என்ற வகையில் தான் அவர்கள் அவதூறு பரப்புகிறார்கள். முருகன் பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அ.தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை."
இவ்வாறு அவர் கூறினார்.






