பள்ளி மாணவிகள் மது குடிப்பது போன்று வீடியோ வெளியீடு: பா.ஜ.க. பெண் பிரமுகர் கைது

மாணவிகள் மது குடிப்பது போன்று வீடியோ வெளியிட்ட பா.ஜ.க. பெண் பிரமுகரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
பள்ளி மாணவிகள் மது குடிப்பது போன்று வீடியோ வெளியீடு: பா.ஜ.க. பெண் பிரமுகர் கைது
Published on

திருச்சி,

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 4-ந் தேதி சவுதாமணி என்பவர் அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் "மனது வலிக்கிறது. வருங்கால இந்தியாவின் தூண்கள் இப்படி அலங்கோலப்பட்டு கிடக்கிறது. திராவிட மாடல் இந்த வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுமைகளை தானே செய்கிறது. மது... கஞ்சா.... திராவிட ஆட்சி தமிழகத்திற்கு சாபக்கேடு" என்று பதிவிட்டு, அதனுடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் 15 வயது மதிக்கத்தக்க 3 பள்ளி மாணவிகள் சீருடையுடன் கையில் பாட்டிலில் மதுபோன்ற பானத்தை வைத்து குடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவை பார்க்கும்போது, யாரோ மேற்படி திரவத்தை கொடுத்து குடிக்க சொல்லி வீடியோ எடுத்து, அந்த பதிவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக தெரிகிறது.

இவ்வாறாக சமுதாயத்தை சீர்கெடுக்கும் விதமாகவும், அரசுக்கும், அரசு பள்ளிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடும், பொதுஅமைதியை கெடுக்கும் வகையில் ஏதோ உள்நோக்கத்துடன் மேற்படி வீடியோவை பரப்பிய சவுதாமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சவுதாமணி பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், ஊடகப்பிரிவு மாநில செயலாளராகவும் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சவுதாமணி மீது, கலகம் செய்வதற்கு தூண்டுதல், பொது அமைதியைக் குலைத்தல், வதந்தி பரப்புதல், குழந்தைகளுக்கு மதுபானம் வழங்குதல், சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் சென்னைக்கு சென்று நேற்று காலை அவரை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் நேற்று மாலை திருச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி பாலாஜி முன்னிலையில் சவுதாமணியை போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது, சவுதாமணி தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். முதல் தகவல் அறிக்கையை படித்து பார்த்த மாஜிஸ்திரேட்டு, சவுதாமணி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை என்று கூறியதுடன், அவரை நீதிமன்ற காவலுக்கு (சிறைக்கு) அனுப்ப மறுத்து, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி அவரை உடனடியாக விடுவித்தார்.

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சவுதாமணி நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் போதை கலாசாரத்தில் பள்ளி மாணவிகள் சீரழிவதை சமூக விழிப்புணர்வுடன் பெற்றோர்கள் கவனிக்கவே இதுபோன்ற பதிவை வெளியிட்டேன். எனக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். என்மீது போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. தமிழகத்தில் மாணவர்கள் போதை பழக்கத்தில் இருந்து மீட்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com