

குறிப்பாக கொரோனா ஒழிப்பு பணிகளில் அவர் காட்டிய தீவிரம், பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவிப்புகள் தமிழகத்தை தாண்டியும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.100 நாட்களில் என்னவெல்லாம் ஒரு முதல்-அமைச்சரால் செய்யமுடியும் என்பதற்கு மு.க.ஸ்டாலின்தான் உதாரணம் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வீடியோ பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் பதிவிடப்பட்ட ஒரு வீடியோவில், மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் தமிழகத்துக்கு செய்த சாதனைகளை அடுக்கடுக்காக ஒருவர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில், அவர் கூறியதாவது:-
நான் ரெண்டு, 3 விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். 2 கோடி குடும்பங்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். 2 கோடி குடும்பங்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொடுத்தார். பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தார். பெண்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம், கொரோனா காலத்தில் நமக்காக பணியாற்றிய டாக்டர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை, நர்சுகளுக்கு ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகை, மற்ற சுகாதார பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார். பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக அங்கீகரித்து சலுகைகள் அறிவித்தார். கொரோனாவால் பத்திரிகையாளர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். பல துறைகளில் வேலையில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு ரூ.4,508 கோடி ஒதுக்கியிருக்கிறார். 100 நாட்களில் ஒரு முதல்-அமைச்சர் செய்த காரியங்கள் இவை. அந்த முதல்-அமைச்சரின் பெயர் பினராயி விஜயன் அல்ல. மு.க.ஸ்டாலின்.
இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலினின் சாதனைகளை கூறும் வீடியோ தெலுங்கிலும் வேகமாக பரவி வருகிறது. பிற மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற பத்திரிகைகளும் மு.க.ஸ்டாலினின் 100 நாட்களின் வியத்தகு சாதனைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களின் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.