

சென்னை,
வீடியோ காலில் அழைத்து கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டிய உடற்பயிற்சி கூட பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஓட்டேரியை சேர்ந்த 19 வயதான என்ஜினீயரிங் கல்லூரி மாணவி, 2024-ம் ஆண்டு உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தார். அப்போது அங்கு பயிற்சியாளராக இருந்த ஓட்டேரி சுபேதார் தெருவைச் சேர்ந்த இம்தியாஸ் ஷெரிப் (27 வயது) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இம்தியாஸ் ஷெரிப், கல்லூரி மாணவியிடம் அடிக்கடி எவ்வாறு ஆடை அணிய வேண்டும். எங்கு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அதன்பிறகு இம்தியாஸ் ஷெரிப்புடன் பழகுவதை நிறுத்திவிட்டார்.
இந்த நிலையில் இம்தியாஸ் ஷெரிப், கல்லூரி மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னுடன் மீண்டும் பேசி பழகும்படி கூறினார். மேலும் அவரை கட்டாயப்படுத்தி வீடியோ காலில் அழைத்து, ஆடையின்றி ஆபாசமாக தோன்றும்படியும், இல்லாவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்து போன மாணவி, இம்தியாஸ் ஷெரிப் சொன்னபடி செய்தார். இதனை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்த அவர், அந்த படத்தை காட்டி மாணவியை தன்னுடன் தனிமையில் வரும்படி மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இதுகுறித்து தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இம்தியாஸ் ஷெரிப், கல்லூரி மாணவியை வீடியோ காலில் அழைத்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியது உறுதியானது. இதையடுத்து நேற்று இம்தியாஸ் ஷெரிப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.