“கத்தியால் வெட்டினார்” - ‘ஏர்போர்ட்’ மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்

‘ஏர்போர்ட்’ மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று தாக்குதல் நடத்தினார்கள்.
சென்னை,
புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் ‘ஏர்போர்ட்' மூர்த்தி. இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் இவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று தாக்குதல் நடத்தினார்கள்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலக நுழைவுவாயில் அருகே நின்றுக்கொண்டிருந்த அவரை சுற்றி வளைத்து தாக்கினார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் தடுக்க முயன்றும் பலன் இல்லை. இந்த நிலையில் ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதலில் ஈடுபட்டார்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ‘ஏர்போர்ட்' மூர்த்தி, “திருமாவளவனின் பட்டியலின சமூக விரோத போக்கை நான் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறேன். திருமாவளவன் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று நான் 2 முறை போலீசில் புகார் அளித்தேன். அதற்கு போலீசார், நிலைமை சரியில்லை, நீங்கள் பார்த்து இருந்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். திருமாவளவன் லுங்கி கட்டிக் கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு பெசன்ட் நகருக்கு ஆட்டோவில் தனியாக வருவது எனக்கு தெரியும். என் வீடு பெசன்ட் நகரில்தான் இருக்கிறது. எனவே இந்த போக்கை திருமாவளவன் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் ஏர்போர்ட் மூர்த்தி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், எங்கள் கட்சியினர் மீது ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் 2 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். எனவே ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.






