

தூத்துக்குடி,
த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் முதல்-அமைச்சராகப் பதவியேற்றதைக் கொண்டாடும் வகையில், அந்த கட்சியின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் மகேந்திரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முடி காணிக்கை செலுத்தித் தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.
நேர்த்திக்கடன் செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் மகேந்திரன் கூறியதாவது:
தளபதி விஜய் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகப் பதவியேற்றால் திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தேன். அதன்படி தலைவர் முதல்-அமைச்சராக அரியணையில் அமர்ந்துள்ளதால், அந்த வேண்டுதலை இன்று நிறைவேற்றியுள்ளேன்.
இத்தனை ஆண்டுகாலம் தமிழகத்தில் பண பலத்தைக் கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்த நிலையை மக்கள் மாற்றியுள்ளனர். ஒரு மிகப்பெரிய மாற்றத்தை தளபதி விஜய் தருவார் என நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வெற்றி 'பணநாயகத்தை' வீழ்த்தி, 'ஜனநாயகத்தை' நிலைநாட்டியுள்ளது.
சாதாரண எளிய மக்களும் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுள்ளது தமிழக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகும். முதல்-அமைச்சர் விஜய தலைமையிலான இந்த ஆட்சி, சாமானிய மக்களுக்கான ஆட்சியாக அமையும். தலைவர் விஜய் அவர்களை முதல்-அமைச்சராக்கிய முருகப்பெருமானுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது மாணவரணி இணை அமைப்பாளர்கள் பாலமுருகன், சுடலை, ராம்குமார், செல்வகணபதி, சதீஷ், மாரிச்செல்வம், செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.