

சென்னை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ். காமராஜ், தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த சூழலில், இன்று காலை சட்டமன்றம் கூடியபோது, த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்கிறேன் என அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ் அவையில் பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.
இதுபற்றி டி.டி.வி. தினகரன் வெளியிட்டு உள்ள செய்தியில், அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ். காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டை மீறி சட்டமன்றத்தில் தன்னிச்சையாக த.வெ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார். அவருடைய வெற்றிக்காக அ.ம.மு.க. தொண்டர்களும், கூட்டணி கட்சியினரும் பாடுபட்டனர்.
ஆனால் அவர், கட்சியின் கொள்கை குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதற்காக நீக்கப்படுகிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கம் செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டி.டி.வி. தினகரன் வெளியிட்ட செய்தியில், தூய சக்திகள் அரசியலுக்கு கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல, துர்நாற்றமே. எம்.எல்.ஏ.வை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது ஜனநாயக மாண்பை அவமதிப்பது ஆகும். த.வெ.க.வுக்கு தன்னிச்சையாக ஆதரவு தெரிவித்த காரணத்திற்காக மட்டுமே காமராஜ் நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
சட்டசபையில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சி நடக்கிறது. நான் முன்பு குதிரை பேரம் பற்றி பேசியிருந்த நிலையில், சட்டசபையில் அது இன்று நிரூபணம் ஆகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான சில நாட்களில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கவர்னரை நேரில் சந்தித்து, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிக்கிறேன் என கூறினார். இதற்கு ஆதரவாக, மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் அவரிடம் கடிதம் அளித்துள்ளார். அதனை கவர்னரிடம் டி.டி.வி. தினகரன் வழங்கினார்.
கடிதம் அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அ.ம.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவு எங்களுக்கு உள்ளது என்று கவர்னரிடம், த.வெ.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை. அவர் விலை போய் இருக்கலாம் என்றார். விஜய் பதவி வெறியில் இருக்கிறார். த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்றும் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அ.ம.மு.க. எம்.எல்.ஏ., எஸ்.காமராஜ் மக்கள் மாளிகைக்கு சென்றார். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, டி.டி.வி. தினகரன் கூறும்போது, கவர்னரிடம் கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை. அந்த கடிதம் போலியானது. காமராஜ் பெயரில் கவர்னருக்கு வாட்ஸ்அப் மூலம் போலி கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது என கூறினார்.
ஒரேயொரு கடித நகலை கொடுத்து எங்களுடைய எம்.எல்.ஏ.வை தூக்க பார்த்துள்ளனர். உலகத்திலேயே கேள்விப்படாத வகையில் மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளனர். மோசடி வேலை செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? என த.வெ.க.வுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
இந்த சூழலில், இன்று காலை சட்டமன்றம் கூடியபோது, த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்கிறேன் என அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ் அவையில் பேசினார். இந்த நிலையில், டி.டி.வி. தினகரன் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.