தவெக தலைவர் விஜய் காரை மறித்து தொண்டர்கள் மனு அளிக்க முயற்சி


தவெக தலைவர் விஜய் காரை மறித்து தொண்டர்கள் மனு அளிக்க முயற்சி
x

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு ஆர்.கே.மணி என்பவர் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் எதிர்ப்பு எழுந்துள்ளது.

சென்னை

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான முன்னெடுப்புகளை தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்டுள்ளது. தற்போது கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை விஜய் முழு வீச்சில் செய்து வருகிறார்.

இதன்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் படிப்படியாகக் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 95 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் இன்று 6வது கட்டமாக இறுதிக் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை விஜய் வெளியிடுகிறார். பனையூர் கட்சி அலுவலகத்தில் விஜய் நேரடியாக ஆலோசனை நடத்தும் நிலையில், அதன் பிறகே இறுதி மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு ஆர்.கே.மணி என்பவர் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் அறிவிப்பு இன்று வெளியாக உள்ள நிலையில் தற்போது இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனையடுத்து நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து பனையூர் கட்சி அலுவலகத்திற்கு தனது காரில் தவெக தலைவர் விஜய் சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் அங்கு வந்த தவெக தொண்டர்கள் பல ஆண்டுகாலம் நாங்கள் உழைத்திருக்கிறோம் எங்கள் தொகுதியை சேர்ந்தவர்களை தான் மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் மற்றவர்களை நியமிக்க கூடாது என தவெக தொண்டர்கள் விஜய்யின் காரை பின் தொடர்ந்து மனுவை அளிக்க முயற்சித்தனர்.

இதனையடுத்து காரின் டிரைவர் மனுவை பெற்றுக்கொண்டுள்ளார். திருவொற்றியூர் தொகுதிக்கு மட்டும் தனி மாவட்ட செயலாளரை நியமிக்க வலியுறுத்தி தொண்டர்கள் மனுவை அளித்துள்ளனர்.

காரின் டிரைவர் மனுவை பெற்றுக்கொண்ட நிலையிலும் விஜய்யிடம் மனுவை ஒப்படைக்க வேண்டும் என காரை தொண்டர்கள் பின் தொடர்ந்தனர்.


Next Story