

கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரியாக சித்தராமையா பொறுப்பேற்றார். 2½ ஆண்டுகளுக்கு பிறகு பதவியை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டது. சித்தராமையா ஆட்சியில் 3 ஆண்டுகள் நீடித்த நிலையில் கட்சி மேலிட உத்தரவுப்படி சித்தராமையா கடந்த மாதம் (மே) 28-ந் தேதி பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத்தொடர்ந்து 30-ந் தேதி கர்நாடக சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சட்டசபை காங்கிரஸ் குழு தலைவராக டி.கே.சிவக்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு டி.கே.சிவக்குமார் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
உடனே கவர்னர், ஆட்சி அமைக்க வருமான டி.கே.சிவக்குமாருக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு பெங்களூருவில் உள்ள லோக்பவன் கண்ணாடி மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில், கர்நாடக முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரணமாமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
கர்நாடக முதல் மந்திரியாக பதவியேற்ற டிகே சிவக்குமாருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார். தமிழக முதல் அமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்த்தில் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல் அமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிடப்பட்டுள்ளது.