

சென்னை,
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது எம்.எல்.ஏ.க்கள் வைத்த விவாதத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் நேற்று முன்தினம் பதிலளித்து பேசினார். அப்போது குட்டிக்கதை ஒன்றை சொன்னார்.
அதன் விவரம் வருமாறு:-
ஒரு ஊர்ல ஒரு பெரியவர் வெயில் அதிகமாக இருக்கிறது என்பதற்காக கண்ணுக்கு மேல கையை வைச்சுகிட்டு சுற்றி தேடிக் கொண்டிருந்தாராம். அப்போது கூட இருந்த ஒரு சின்ன பையன், என்ன தேடுறீங்கனு கேட்டானாம்?. அதற்கு அந்த பெரியவர் சொன்னாராம், அது ஒன்னும் இல்ல தம்பி. உங்க அப்பா இங்கேதான் இருப்பார்னு சொன்னாங்க. அதான் தேடிட்டு இருக்கேன். எங்க உங்க அப்பாவையே காணோம்?. இவ்வாறு குட்டிக்கதையை அவர் சொன்னார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் விமர்சனத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். திருவாரூரில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
“எங்க உங்க அப்பாவைக் காணோம்..' என முதல்-அமைச்சர் விஜய் சொல்லி இருக்கிறார். சட்டமன்றத்தில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும், என்றைக்கும் மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன். அப்பாவ அங்க தேடாதிங்க! மக்கள் மனதில் பதிந்திருக்கிறார். நீங்க தேடுற இடத்தில் நான் இருக்க மாட்டேன். மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்.
கோட்டையில்தான் அனைத்து கோப்புகளும் இருக்கிறது; கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எனும் கோப்பில் மு.க.ஸ்டாலின் என்ற கையெழுத்து இருக்கும்; அங்கு இந்த ஸ்டாலின் இருப்பேன்
புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற கோப்புகளில் ஸ்டாலின் இருப்பான்; கோட்டையில்தான் இருக்கிறேன்; ஆட்சியில்தான் இருக்கிறேன். மகளிர் உரிமை திட்டம் இருக்கும்வரை இந்த ஸ்டாலின்தான் முதல்-அமைச்சர்
நான் அரசியலுக்கு வந்து ஏறக்குறைய 60 ஆண்டுகளாக, மக்களுக்காக செயலாற்றி வருகிறேன். நான் முதல்-அமைச்சராக இருந்து பணியாற்றியதுபோல் வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் இப்போது ஏராளமான பிரச்சினைகள். ஒரு பக்கம் மின்வெட்டு பிரச்சினை, இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. ஆனால், தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் குறித்த நேரத்தில் நீர் திறந்துவிட்டோம். அதுதான் நம் ஆட்சி.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் முதலாவதாக இருப்பவர்கள் திமுகவினர். கூட்டணியில் இருந்து மற்ற கட்சிகள் அவர்களாகவே வெளியேறுகிறார்கள் தி.மு.க நிர்வாகிகள் கூட்டணியே வேண்டாம் என்கிறார்கள். அதை நாங்கள் விரைவில் பரிசீலிப்போம்! பரிசீலிப்போம்! பரிசீலிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.