கரூர் செல்ல அனுமதி கோரிய விஜய்.. டிஜிபி அலுவலகத்தில் மனு

கோப்புப்படம்
கரூர் செல்ல அனுமதி கோரி விஜய் சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது
சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கரூரில் சோகவடு இன்னும் நீங்கவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில், த.வெ.க. தலைவர் விஜய் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் கூற கண்டிப்பாக நான் கரூர் வருவேன் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் எப்போது கரூர் செல்வார்? என்ற கேள்வி எழுந்தது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றது ஏன்? என்று கோர்ட்டும் கேள்வி எழுப்பியிருந்ததது. இதற்கிடையில், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் த.வெ.க. தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த சூழலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்க டிஜிபியிடம் அனுமதி கோரி உள்ளோம். கூட்ட நெரிசலில் உயிரிழந்த 33 பேரின் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். விஜய் கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பி உள்ளோம். டிஜிபி அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கரூர் செல்ல அனுமதி கோரி விஜய் சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விஜய் கரூர் செல்லும் போது அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இமெயில் மூலம் கடிதம் அனுப்பி இருந்தநிலையில் இன்று நேரில் சென்று தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.






