அதிமுகவை பற்றி விமர்சிக்க விஜய்க்கு தகுதி இல்லை: கடம்பூர் ராஜு பதிலடி


அதிமுகவை பற்றி விமர்சிக்க விஜய்க்கு தகுதி இல்லை: கடம்பூர் ராஜு பதிலடி
x
தினத்தந்தி 27 Sept 2025 6:32 PM IST (Updated: 27 Sept 2025 6:38 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

சென்னை,

சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த 13-ந் தேதி முதல் தவெக தலைவர் விஜய் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இன்று நாமக்கல், கரூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். வழிநெடுக அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

நாமக்கல் பி.கே.புதூர் பகுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதாவது:-

கடந்த தேர்தல் அறிக்கையில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா?. நடப்புக்கு சாத்தியமானதை சொல்வோம். திமுக சொல்லும் பொய் வாக்குறுதிகளை சொல்லமாட்டோம். பாசிச பாஜக அரசோட நாங்கள் ஒத்துப்போகமாட்டோம். திமுக அரசுபோல் அன்டர்கிரவுண்ட் டீலிங் செய்யமாட்டோம்.

மூச்சுக்கு 300 முறை அம்மா அம்மா-னு சொல்லிட்டு, ஜெயலலிதா மேடம் சொன்னதை எல்லாம் மறந்துட்டு, பொருந்தாத கூட்டணிய அமைச்சுகிட்டு, தமிழ்நாட்டு நலனுக்காக கூட்டணினு சொல்லிட்டு இருக்காங்களே அவங்கள மாதிரி நாம இருக்க மாட்டோம்.

நீட் ஒழிக்கப்பட்டதா, கல்வி நிதி வழங்கப்பட்டதா, தமிழகத்திற்கு தேவையானதை பாஜக செய்யவில்லை. ஏன் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என எம்.ஜி.ஆர். தொண்டர்கள் கேட்கிறார்கள். அதிமுக - பாஜக நேரடி உறவுக்காரர்கள். அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை . தி.மு.க. , பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு வைத்துள்ளது. என்று கூறினார்.

இந்த நிலையில், அதிமுக குறித்த விஜய்யின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், “பொன்விழா கண்ட அதிமுக பற்றி விமர்சிக்க விஜய்க்கு தகுதியே இல்லை. விஜய் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார்; அவருக்கு ஒன்றும் தெரியாது. அவர் ஒரு கத்துக்குட்டி. எங்கள் கூட்டணியை பற்றி பேச அவருக்கு உரிமை இல்லை. அவரது வேலையை அவர் பார்க்கட்டும். விஜய் மாவட்டத்துக்கு ஒரு கூட்டம் செல்கிறார்; ஆனால் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக செல்கிறார்” என்று கூறினார்.

1 More update

Next Story