பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்த புரிதல் விஜய்க்கு இல்லை - மாணிக்கம்தாகூர் எம்.பி.

பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்த புரிதல் விஜய்க்கு இல்லை என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
விருதுநகர்,
விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய், பரந்தூர் விமான நிலைய பிரச்சினை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்தார். இந்த பிரச்சினை குறித்த புரிதல் வேண்டும்; ஆனால் அவருக்கு புரிதல் இல்லை. கடந்த ஆண்டு கட்சி ஆரம்பித்த அவர் தற்போதுதான் களத்திற்கு வந்துள்ளார்.
அரிட்டாபட்டி பிரச்சினை குறித்து நாங்கள் ஏற்கனவே பேராட்டம் நடத்தி உள்ளோம். இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தி உள்ளோம். பரந்தூர் பிரச்சினையில் அரசியல் தேவையில்லை. டங்ஸ்டன் சுரங்க பிரச்சினையில் டெண்டர் விட்ட உடனே போராட்டம் நடத்தப்பட்டது. அதனால் அத்திட்டம் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் இந்தியா கூட்டணி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வலுவாக உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் விவசாயிகளை, பனைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.