விஜய்க்கு அகந்தை அதிகமாக உள்ளது: சபாநாயகர் அப்பாவு விமர்சனம்

விஜய்யின் பேச்சை மக்கள் விரும்பவில்லை என்று அப்பாவு விமர்சித்துள்ளார்.
நெல்லை,
சபாநாயகர் அப்பாவு நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“முதல் அமைச்சர், பிரதமர் குறித்து பேசும் போது கண்ணியமாக பேச வேண்டும். பின்புலத்தில் அமித் ஷா, பாஜக இருப்பதன் தைரியத்தில் விஜய் அகந்தையோடு பேசுகிறார். மத்திய அரசே சிலரை கட்சி தொடங்க வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. விஜய் சினிமாவில் பேசுவது போலவே பேசுகிறார். இந்த மாதிரி அகந்தை இருக்கக் கூடாது.
‘ஒய் பாதுகாப்பு கேட்காமலே கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். நான் ஒரு பிரசாரத்திற்கு வந்தால் இவ்வளவு நிபந்தனை போடுகிறீர்கள். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ பிரசாரத்திற்கு வந்தால் இப்படி நிபந்தனை போடுவீர்களா? சி.எம். சார் போட்டு பாருங்களேன்’ என்று விஜய் சொல்வதிலிருந்தே அவர்கள்தான் இயக்குகிறார்கள் என்பது தெரிகிறது. விஜய்க்கு அரசியலில் அரிச்சுவடு தெரியாது என்று நினைக்கிறேன். விஜய் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார். இதை மக்கள் விரும்பவில்லை” என அவர் கூறினார்.






