பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்த விஜய்

தவெக சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
Published on

சென்னை,

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது.

கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் இன்று மாணவர்களுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கி வருகிறார்.

இதில் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை, பேனா பரிசு வழங்கி விஜய் கவுரவித்தார். முன்னதாக மாணவி ராஜேஸ்வரி பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. விழாவில் விஜய் பேசுகையில், "மாணவி ராஜேஸ்வரிக்கு வாழ்த்துகள். வீட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிச்சு சாதித்திருக்கிறார். அவருக்கு விஞ்ஞானி ஆகனும்னு ஆசை இருக்கிறது. கண்டிப்பா ஒருநாள் விஞ்ஞானியாக மாறுவார்" என்று கூறினார்.

இதையடுத்து பேசிய மாணவி ராஜேஸ்வரி, நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்ததை அனைவரும் பார்த்தீர்கள், நான் இந்த மேடைக்கு வருவேன் என எதிர்பார்க்கவே இல்லை. நீங்களும் என்னை போல் ஆக வேண்டுமென்றால் உங்களுக்கு உள்ள ஒரே வழி கல்வி மட்டும்தான், அதை எப்போதும் விட்டு விடாதீர்கள். விஜய் அண்ணாவை பார்க்க வேண்டும் என்பது சின்ன வயதில் இருந்து பெரிய கனவு. என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com