

சென்னை,
சென்னையில் நேற்று இரவு மாநகராட்சி கமிஷனர் சமீரன் பல்வேறு பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து மழைநீர் வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் திருவொற்றியூர், மணலி, பாரிமுனை, மன்னடி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்தது. மேகவெடிப்பு போன்ற ஒரு சூழல் வந்தது. 1 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை பெய்தது. 21-ந்தேதி வரையில் மழைபொழிவுக்கு வாய்ப்புள்ளது.
எனவே, தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 15 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் இரவு, பகலாக களப்பணியாற்றி வருகின்றனர். மழைநீர் தேங்கும் பகுதியில் சிறுவர்களை விளையாடக்கூடாது என்று பெற்றோர்களுக்கு அறிவுத்தல் வழங்கியுள்ளோம்.
முதல்-அமைச்சர் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மழை நிலவரம் பற்றி கேட்டறிந்தார். அதுபோக, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களையும் எங்களுக்கு பகிர்ந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டிடங்களில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.
பொது இடங்களில் உள்ள மின்சார பெட்டிகளை பொதுமக்கள் எச்சரிக்கையாக அணுக வேண்டும். தண்ணீர் சூழ்ந்த பகுதிகளிலும், ஆற்றுப்பகுதிகளிலும் வீடியோ எடுக்கவும், வேடிக்கை பார்க்கவும் பொதுமக்கள் செல்லக் கூடாது. 21-ந்தேதி வரை இரவு நேரங்களில் அதிக கனமழை பெய்யும். எனவே, அதற்கேற்ப பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.