

சென்னை,
சென்னை மாதவரம் பால் பண்ணையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பால் கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்து அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் விஜய் விரிவாக கேட்டறிந்தார். தொடர்ந்து ரூ.2.23 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆவின் மைய ஆய்வக துணை கட்டிடத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் மாதவரம் பால்பண்ணை வளாகத்தில் கட்டப்படும் புதிய பண்ணையின் கட்டுமானப் பணிகளை முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு முதல்-அமைச்சர் விஜய் சென்றார். எம்.எல்.ஏ. அலுவலகத்தில் திரண்டிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மேலும் இ-சேவை மூலமாக விண்ணப்பித்த மக்களுக்கு பல்வேறு சான்றிதழ்களையும் முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.
தொடர்ந்து தொகுதி மேம்பாட்டுப் பணிகள், பொதுமக்களின் குறைகள் கையாளப்படும் விதம் மற்றும் பிரத்யேக செயலியின் செயல்திறன் ஆகியவற்றை முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். பெரம்பூர் தொகுதி மக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் வடசென்னை பகுதிகளில் மழைநீர் தேங்குவது, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.