கூட்டத்தை பார்த்து முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என மாயையில் இருக்கிறார் விஜய்: பி.டி.செல்வகுமார் பேட்டி

சினேகா, நமீதா போன்றவர்கள் வந்தாலும் கூட்டம் கூடும்; இதற்கு முன்னர் சில்க் ஸ்மிதா வரும் போது கூட்டம் வர தான் செய்தது என்று தி.மு.க. நிர்வாகி பி.டி.செல்வகுமார் கூறினார்.
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. பிரமுகருமான பி.டி.செல்வக்குமார் 48 பேருக்கு ஆட்டுக்குட்டிகளையும், அரிசி பைகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களையும், முக்கியமாக அங்கீகாரத்தையும் கொடுத்து வருகிறது. ஆனால் த.வெ.க. தலைவர் விஜய் புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களை வைத்துக்கொண்டு தாய், தந்தையர்களை ஓரம் கட்டி வருகிறார். கூடவே இருந்த ஜெயசீலன் உட்பட பலரும் இவருடன் தற்போது இல்லை. தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை; ஏளனமாக பார்க்கின்றனர்.
அங்கு இருக்கும் சில மாபியா கும்பலால் கட்சி பின்னோக்கி செல்கிறது. புதிதாக கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் போன்றவர்களை வைத்து கட்சி நடத்தி வருகிறார்கள். விஜய்க்கு பால் அபிஷேகம்; அவருக்காக உழைத்தவர்கள் யாருக்கும் தற்போது மரியாதை இல்லை. தூத்துக்குடியில் உள்ள அஜிதா என்ற பெண் அவர் முன்னே செல்லும் போது அந்த பெண்ணை விஜய் பார்க்கவில்லை. ஒரு 3 நிமிடம் அவருக்காக ஒதுக்கி அவரிடம் என்ன குறை என்று கேட்டிருக்கலாம்.
அந்த நேரத்தில் பின்பக்கமாக ஏறி குதித்துப் போனவர் தான் புஸ்ஸி ஆனந்த். தற்போது தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார் அஜிதா என்ற அந்த பெண். தமிழகம் முழுவதும் 20 மாவட்ட செயலாளர்கள் விஜய் மீது அதிருப்தியில் இருக்கின்றார்கள். விஜய்யை சுற்றி இருப்பவர்களுக்கு பணம்தான் முக்கியம். விஜய் கண்ணும் கருத்துமாக இல்லை. ஒரு பெண் அவர் முன்னே சென்று பார்க்க வேண்டும் என்று சொல்லும் போது அவரை பார்க்காமல் விஜய் போனால் அவர் யாரைத்தான் பார்ப்பார்.
தீய சக்தி என்று தி.மு.க.வை கூறும் விஜய் உண்மையான தீய சக்தி யார் என்றால் விஜய் தான். இவர் யாருக்கும் எதுவும் செய்யமாட்டார். 200 கோடி சம்பளத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ளேன் என்கின்றாரே, நூறு கோடி ரூபாயை இதற்கு முன்னதாக பொது மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி இருக்கலாமே?
நான் விஜய் உடன் பயணிக்கும் போது சென்னை- கன்னியாகுமரி வரை ஆறுகளை சுத்தப்படுத்தக் கூறியிருந்தேன். 15 கோடி ரூபாய் தான் மதிப்பு ஆனால் அதனை அவர் செய்யவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் அவரிடம், விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு? அதனை நடிகை திரிஷாவிடம் கேட்டால் தான் தெரியும். தற்போது வரை பூத் கமிட்டி வலுப்படுத்தவில்லை. இதனால் தமிழக மக்கள் தான் பாதிக்கப்பட உள்ளனர். நடிகை சினேகா, நமீதா போன்றவர்கள் கூடினாலும் கூட்டம் வரும். இதற்கு முன்னதாக சில்க் ஸ்மிதா வரும் போது கூட்டம் வர தான் செய்தது. நடிகர்கள் வந்தால் தி.மு.க., பா.ஜ.க. என அனைவருடைய குடும்பமும் வந்து பார்க்கத்தான் செய்யும்; இது இயல்பு.
இந்த கூட்டத்தை பார்த்து விஜய் முதல்-அமைச்சராகி விடலாம் என்று மாயையில் இருக்கிறார். ஆனால் தி.மு.க. நல்ல, நல்ல திட்டங்களை அக்கறையோடு செய்து கொண்டு வருகிறது. ஆனால் விஜய் கட்சியில் வசூல் வேட்டை தான் நடைபெறுகிறது. தற்போது 20 மாவட்ட செயலாளர்கள் என்னிடம் பேசிக் கொண்டு வருகிறார்கள். பொங்கலுக்குப் பின் அவர்களை தி.மு.க.வில் இணைக்கும் விழா நடைபெறும்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கு பின்பு அவர் மீண்டும் படப்பிடிப்பிற்கு செல்வார். ரசிகர்களிடம் பிளாக் டிக்கெட் விற்கக் கூடாது என்று அவர் தைரியமாக அறிக்கை விடுவாரா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிகழ்சியில் நெல்லை கிழக்கு தி.மு.க. பொறியாளர் அணி செயலாளர் ஜோசப்சந்திரன், வக்கீல் பாலகிருஷ்ணன், ஏசுதாசன், டி.ராஜேந்தர் நற்பணி மன்ற நிர்வாகி சிம்பு கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






