தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் சேர்ந்து தவெக தலைவர் விஜய் கேக் வெட்டி கொண்டாடினார்.
செங்கல்பட்டு,
தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த கிறிஸ்துமஸ் விழாவில் நலத்திட்ட உதவிகளை தவெக தலைவர் விஜய் வழங்கினார். இந்த விழாவில் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்திருந்தார்.
இன்று காலை முதலே விழா நடக்கும் இடத்திற்கு தவெக தொண்டர்கள் குவிந்தனர். இதில் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய தவெக தொண்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து கிறிஸ்துமஸ் விழாவிற்கு தவெக தலைவர் விஜய் காலை புறப்பட்டார். தொடர்ந்து மாமல்லபுரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் கலந்துகொண்டார். அங்கு அவரை கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். இதனை தொடர்ந்து இந்த விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினரை வரவேற்க, அவர்களுக்கு மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து கவுரவித்தார்.
இதனையடுத்து அவர் விழாவில் சிறப்புரை ஆற்றினார். பின்னர் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் சேர்ந்து தவெக தலைவர் விஜய் கேக் வெட்டி கொண்டாடினார்.






