

காரைக்குடி,
தவெக தலைவர் விஜய் இன்று காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த விஜய், அங்கிருந்து தனது பிரசார வேனில் பயணித்தபடி ரோடு ஷோவாக வந்தார்.
மதுரையில் இருந்து காரைக்குடிக்கு 1.30 மணி நேரத்தில் வந்துவிடலாம் என்ற போதிலும், வழி நெடுக மக்கள் கூட்டம் அலைமோதியதால் விஜய் வந்து சேர தாமதமானது. 12.30 மணியில் இருந்து 2.30 மணி வரை மட்டுமே காரைக்குடி கண்ணதாசன் நகர் பகுதியில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தாமதமாக விஜய் பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வந்தார்.
விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்துவிட்டதால், விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், விஜய் அங்கிருந்து பேசாமல் புறப்பட்டு சென்றுவிட்டார். தவெக வேட்பாளர்களை வேனில் ஏற்றி, விசில் சின்னத்தை கையில் ஏந்தியபடி வாக்கு மட்டும் சேகரித்தார்.
விஜய் பேசாமல் புறப்பட்டு சென்றதால், காலையில் இருந்து காத்துக்கிடந்த தவெக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சீமான் போட்டியிடும் தொகுதியில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், விஜய் பேசாமலேயே திரும்பி சென்றுள்ளார்.