விஜய் ஆடியது பழைய டான்ஸ்; இது நம்ம ஊரிலும் ஆடுவார்கள்: அமைச்சர் இ.பெரியசாமி

வீட்டில் முடங்கி கிடக்கும் விஜய் அரசியல்வாதியே இல்லை என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
விஜய் ஆடியது பழைய டான்ஸ்; இது நம்ம ஊரிலும் ஆடுவார்கள்: அமைச்சர் இ.பெரியசாமி
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க. வெற்றிபெற்று, மீண்டும் தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார். விஜய் முதலில் அரசியலுக்கு வரட்டும். அரசியலில் என்ன செய்ய போகிறார் என்ற கருத்தை சொல்லவில்லை. வீட்டில் முடங்கி இருக்கிறார். இது மக்கள் மத்தியில் ஈடுபடாது. மக்கள் எல்லா அரசியலையும் பார்த்துவிட்டனர்.

தமிழகத்தில் நிலைத்த அரசியலுக்கும், புகழுக்கும் ஒரே இயக்கம் தி.மு.க. தான். இந்தியாவின் தலைசிறந்த முதல்-அமைச்சரான மு.க. ஸ்டாலினுக்கு, 70 சதவீத மக்களின் ஆதரவு இருக்கிறது. விஜய் தேர்தலில் வந்து நிற்கட்டும், பின்னர் பார்ப்போம். எந்த இயக்கமாக இருந்தாலும் அரசியல் ரீதியாக விமர்சிப்போம். விஜய் அரசியல்வாதியே கிடையாது.

கரூர் சம்பவத்துக்கு கூட வந்து எட்டிப் பார்க்கவில்லை. அவர் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார். 41 பேர் கூட்ட நெரிசலில் தண்ணீர் இல்லாமல் இறந்தது தெரிந்தும், நேரில் வந்து பார்க்க மனமில்லை. இவர் எப்படி 7 கோடி மக்களை காப்பாற்ற போகிறார். ஏதோ நடித்து பார்க்கிறார். டான்ஸ் ஆடி பார்க்கிறார். இந்த டான்ஸ் பழைய டான்ஸ். இந்த டப்பாங்குத்து நம்ம ஊரிலும் ஆடுவார்கள்.

கூட்டணி கட்சிகள் தொகுதிகளை கேட்பது, அவர்களின் உரிமை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பை பொறுத்து ஜனநாயக ரீதியில் தொகுதிகளை வழங்குவார். காங்கிரஸ், அரசியல் ரீதியாக எங்களுடன் கூட்டணி அமைத்து, இத்தனை ஆண்டுகள் ஒரே அணியில் இருக்கிறது. அந்த கூட்டணி தொடர்கிறது. இது தான் மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது. சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் வரிசையாக வெற்றி தான்.

எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகளாக எங்கு சென்றார் என தெரியவில்லை. தற்போது தான் மக்களை சந்திக்கிறார். தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க.வுக்கு வந்தால் முதல்-அமைச்சர் முடிவு செய்வார். அண்ணாமலை திடீரென ஏதாவது கூறுவார். கடந்த 5 ஆண்டுகளாக எதுவும் சொல்லவில்லை. தற்போது பழனியில் ஆர்ப்பாட்டம் செய்ய போகிறேன் என்கிறார். பழனிக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம்?. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com