

சென்னை,
சட்டசபையில் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, தி.மு.க. உறுப்பினர் பெரியசாமி, 'எங்கள் ஆட்சியில் மலையில் இருக்கும் கிராமங்களுக்கு முதல்-அமைச்சர் சாலைதிட்டம் மட்டுமல்லாது, அத்தனை திட்டங்களிலும் சாலைகள் அமைத்து கொடுத்து இருக்கிறோம். மலைப்பகுதிகளில் இருக்கும் சாலைகளை இணைக்கும் பகுதிகளை முடித்துள்ளோம். 5 சாலைகள் மட்டும்தான் மீதம் இருக்கிறது. அதுவும் வனத்துறை அனுமதி கிடைக்காததால்தான். அந்த திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கியிருக்கிறீர்கள்' என்றார்.
அதற்கு அமைச்சர் ஆனந்த் எழுந்து பதிலளித்தபோது, 'திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தாண்டிக்குடி பஞ்சாயத்தில் கடந்த ஆண்டு மே மாதம் எங்கள் தலைவர் படப்பிடிப்புக்காக சென்றிருந்தார். ஒரு காட்சி எடுக்க கரடுமுரடான பாதையில் ஜீப்பில் சென்றார். நானும் கூட சென்றிருந்தேன். கீழே வரும்போது ஒரு மணி நேரம் தனியாக நடந்து வந்தார். வந்தவுடன் 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. சொந்த செலவில் சாலைகள் அமைக்கலாமா? என்றார். அப்போது நம்மல பேனர் வைக்கவே விடல... இதுல எங்க ரோடு போட விடுவாங்க சார் என்று நான் சொன்னேன். நம்முடைய ஆட்சி வந்ததும் சாலை அமைத்துவிடலாம் என்றேன். உடனே சிரித்தார். நான் பதவி ஏற்ற 5-வது நாளில் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து நோட் சீட் வருகிறது. தாண்டிக்குடி கிராமத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. நான் மறந்துவிட்டேன். அவர் நினைவில் வைத்து உத்தரவிட்டார். இப்போது ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது' என்றார்.
அதனைத்தொடர்ந்து பெரியசாமி கூறுகையில், 'கூடம் நகர்தான் அமைச்சர் சொல்கிறார். பிரதான சாலைகளில் அது இல்லை. கூடம்நகருக்கு நாங்கள் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அதில் டெண்டர் எடுத்த வீரக்குமார் என்பவர் இறந்துவிட்டார். அதன் பிறகு மீண்டும் டெண்டர் வைத்து அதில்தான் இப்போது பணி நடக்கிறது. அதற்கு டெண்டர் கொடுத்ததும் எங்கள் ஆட்சிதான்' என்றார்.