

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், சட்டசபையில் தவெக உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும்.
ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் என்ற சூழ்நிலையில் தவெகவுக்கு 5 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனாலும், பெரும்பான்மைக்கு இன்னும் இடங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்டு(2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் தவெகவுக்கு 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து, தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் ஆட்சி அமைக்க கவர்னரிடம் தவெக தலைவர் விஜய் உரிமை கோரினார். மேலும், 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் கவர்னரிடம் விஜய் வழங்கினார். இதையடுத்து, விஜய் தலைமையிலான அரசு நாளை பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில், முதல்-அமைச்சராக விஜய் நாளை பதவியேற்க உள்ள நிலையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பதவியேற்பு விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.