விஜய் சுற்றுப்பயணம்: மாவட்ட செயலாளர்களுக்கு தவெக உத்தரவு


விஜய் சுற்றுப்பயணம்: மாவட்ட செயலாளர்களுக்கு தவெக உத்தரவு
x
தினத்தந்தி 31 Aug 2025 12:06 PM IST (Updated: 31 Aug 2025 12:42 PM IST)
t-max-icont-min-icon

தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி தவெக நகர தொடங்கியுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசியல் களத்தில் தி.மு.க, அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது. பிரதான கட்சிகளாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களது தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது.

நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. விஜய் தலைமையிலான த.வெ.க.வும் கிட்டத்தட்ட தனித்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எந்த அணியில் இணைவது என்று முடிவு செய்யவில்லை. ஜனவரிக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்வதாக தே.மு.தி.க. ஏற்கனவே அறிவித்துவிட்டது.

இந்த சூழ்நிலையில் மதுரையில் 2-வது மாநாட்டை நிறைவு செய்துள்ள த.வெ.க. தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகர தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். த.வெ.க.வின் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்காக மாவட்ட செயலாளர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்ந்து விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையில், பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் டெல்டாவையொட்டியுள்ள மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்குள் 25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளரை நியமனம் செய்ய மாவட்டச் செயலாளர்களுக்கு தவெக உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு ஒன்றிய செயலாளர் இருந்த நிலையில் தொகுதி வாக்குச்சாவடி அடிப்படையில் ஒன்றிய செயலாளர் பதவியை பிரிக்க கட்சியின் தலைமை அறிவுறுத்தி உள்ளது.

வீடு வீடாகச் சென்று தவெக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு தலைமையகத்திற்கு லிஸ்ட் அனுப்ப வேண்டும் என்றும் தொகுதி ரீதியாக இருக்கக்கூடிய அனைத்து பிரச்னைகளையும் கேட்டறிந்து அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story