இலவசங்கள் அறிவிக்க கூடாது என்று கூறிய விஜய் இலவசங்களை அறிவித்திருக்கிறார் - எல்.முருகன்

நடிகரை பார்க்க வரும் கூட்டம் வேறு, அரசியல் நோக்கத்தோடு வரும் கூட்டம் வேறு என மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
இலவசங்கள் அறிவிக்க கூடாது என்று கூறிய விஜய் இலவசங்களை அறிவித்திருக்கிறார் - எல்.முருகன்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளும் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது. அதேபோல, எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜக, அமமுக கட்சிகள் உள்ளிட்ட 14 கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர் பிராசாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ச்சியான பிரதமர் மோடியின் பொதுக்கூட்டமும் அக்கூட்டணிக்கு பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், மதுரை பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி வரும் 11 ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்க உள்ளார். இதற்கான, பொதுக்கூட்ட திடல் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய இணை மந்திரி எல். முருகன் மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மதுராந்தகத்திலும், மதுரையிலும் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதேபோல் வரும் 11-ம் தேதி திருச்சியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வருகிறார். பியூஸ் கோயல் ஆலோசனைப்படி அதற்கான ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் கூட்டமாக இருக்கும். தற்போதுள்ள நிலவரப்படி கூட்டணி கட்சியினர் ஏழு லட்சம் பேரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளோம். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வி பயத்தின் உச்சத்தில் இருக்கிறார். எப்போது தேர்தல் நடந்தாலும் தோல்வி என்பது அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒன்று

இலவசங்கள் அறிவிக்க கூடாது என்று கூறிய விஜய் இலவசங்களை அறிவித்திருக்கிறார். புதிதாக அரசியலுக்கு வந்து முதல் தேர்தலை சந்திக்கும் அவர் இதுவரைக்கும் எதையும் செயல்படுத்தி நிரூபிக்கவில்லை. அவரது அறிவிப்பு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் மக்களிடம் எந்த அளவுக்கு ஓட்டுகள் வாங்குவார் என்பது உறுதியாக சொல்ல முடியாது. சினிமா நடிகர்களை பார்க்க வரும் கூட்டம் வேறு அரசியல் கட்சி நோக்கத்தோடு வரும் கூட்டம் வேறு. நடிகரை பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்பது எம்.ஜி.ஆர் காலத்தோடு முடிந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com