

சென்னை,
சிவகாசி அருகே உள்ள ஆ.புதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தது புதுவருட பிறப்பில் பெரும் சோகம் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில புத்தாண்டு நன்நாளில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆ.புதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி, 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இனிவரும் காலங்களில் பட்டாசு விபத்துகளை தடுக்க, உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக தமிழக அரசு துறை சார்ந்த தனிக்குழுவை அமைத்து பட்டாசு ஆலைகளை கண்காணிக்க வேண்டும். பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.