தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
கடும் நெரிசல் ஏற்பட்டதையடுத்து விஜயகாந்தின் உடல் இன்று காலை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தீவுத்திடலில் மதியம் வரை விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் விஜயகாந்த் உடல், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.