

சென்னை,
சென்னை, திடீர்நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை புரசைவாக்கம் பிரிக்லின் சாலையில் உள்ள திடீர் நகர் பகுதியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 40 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் இன்றி சுகாதாரமற்ற நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இறந்தவர்களின் சடலங்களை வைப்பதற்கு கூட இடம் இல்லாமலும், இறப்பு சடங்குகளை செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தேமுதிகவை சேர்ந்த கு. நல்லதம்பி, திடீர் நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தர வேண்டுமென சட்டப்பேரவையில் வலியுறுத்தி இருந்தார். அதன் பிறகு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மூலம் பலமுறை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டும், அப்பகுதி மக்களிடம் நேரில் ஆய்வு செய்தும், பயோ மெட்ரிக் சர்வே எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டது.
ஆனால் இதுநாள் வரை அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆட்சிகள் மாறினாலும் அப்பகுதி மக்களின் வாழ்வில் காட்சிகள் மாறவில்லை. எனவே திடீர் நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.