

சென்னை,
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையத்து தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சியினர், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.
இதனையடுத்து சென்னை கேயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களின் உடனான ஆலேசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் விஜயகாந்த் நிச்சயம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்றும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக மூட வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு மத்திய, மாநில அரசுகள் 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.