'விஜயதரணி பா.ஜ.க.வில் இணைந்தது தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்' - ஜோதிமணி எம்.பி.

கொள்கையில் சமரசம் செய்துகொள்வதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.
'விஜயதரணி பா.ஜ.க.வில் இணைந்தது தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்' - ஜோதிமணி எம்.பி.
Published on

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி அந்தக்கட்சியிலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி பா.ஜ.க.வில் இணைந்தார்.

இந்நிலையில் 'விஜயதரணி பா.ஜ.க.வில் இணைந்தது தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்' என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"தலைவர் ராகுல் காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்திருப்பது, இந்த தேசத்துக்கு செய்யும் மாபெரும் துரோகம்.

அரசியல் பெண்களுக்கு எப்போதும் போர்க்களம்தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்திதான் கடக்க வேண்டியிருக்கிறது. பெண்களின் உழைப்பும், திறமையும், செல்வாக்கும் அவ்வளவு எளிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான்.

ஆனால், அதற்காக கொண்ட கொள்கையில் சமரசம் செய்துகொள்வதையும், நாம் இவ்வளவு காலம் எதிர்த்து நின்ற பா.ஜ.க.வின் பாசறைக்குச் செல்வதையும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது."

இவ்வாறு ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com