“முதல்-அமைச்சரை விமர்சித்த விஜய்யின் தராதரம் அவ்வளவு தான்” - அமைச்சர் கே.என் நேரு காட்டம்

பெரிய கட்சியின் தலைவர், 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ளவரை, நேற்று வந்த விஜய் விமர்சிப்பதாக அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.
“முதல்-அமைச்சரை விமர்சித்த விஜய்யின் தராதரம் அவ்வளவு தான்” - அமைச்சர் கே.என் நேரு காட்டம்
Published on

திருச்சி,

2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த சூழலில் 2-வது மாநில மாநாடு நேற்று மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அந்த மாநாட்டில் திமுக குறித்து பேசிய விஜய், கடந்த 4 ஆண்டுகளில் துறை சார்ந்த ஊழல்கள், மக்கள் பிரச்சினைகள் குறித்து கேள்விகளை அடுக்கினார். மேலும் திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்து நிறைவேற்றப்பட்டதா? என்று கேள்வி எழுப்பி அதற்கு மக்கள் இல்லை என்று அளித்த பதில் உங்களுக்கு கேட்கிறதா அங்கிள் ஸ்டாலின் என்று அரங்கம் அதிர விஜய் பேசினார். இதற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்தது குறித்து அமைச்சர் கே.என்.நேருவிடம் திருச்சியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, அவரது தராதரம் அவ்வளவு தான். ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர், பெரிய கட்சி தலைவர், 40 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறார். நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு அவரை அப்படி சொல்வது தரம் தாழ்ந்த செயல். மக்கள் நல்ல பதில் சொல்வார்கள். நாங்களும் தேர்தலில் நல்ல பதில் சொல்வோம். அதில் ஒன்றும் மாற்றமில்லை. 10 பேர், 50 பேர் கூடிவிட்டார்கள் என்பதற்காக மாநில முதல்-அமைச்சரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எவ்வாறு சரியாக இருக்கும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com