விஜய்யின் பெருந்தன்மையால் மாநிலங்களவை வாய்ப்பு கிடைத்துள்ளது- பிரவீன் சக்கரவர்த்தி

தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க என் குரல் ஓங்கும். தமிழக மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என்று பிரவீன் சக்கரவர்த்தி கூறினார்.
பிரவீன் சக்கரவர்த்தி
Published on

சென்னை,

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.வின் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து எம்.எல். ஏ.வாக பதவி ஏற்கும் முன்பு, சி.வி.சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவரது எம்.பி. பதவி காலம் முடிவதற்கு இன்னும் 2½ ஆண்டு உள்ளது. அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதால், தமிழகத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை ஒரு உறுப்பினர் பதவியிடம் காலியானது. இதற்கிடையே, நாடு முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்களுக்கான தேர்தல் ஜூன் 18-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதனுடன் தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 8-ந் தேதியாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 9-ந் தேதி நடக்கிறது. வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் ஜூன் 11-ந் தேதி யாகும். ஜூன் 18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கிடையில், தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவியை காங்கிரசுக்கு த.வெ.க. ஒதுக்கீடு செய்தது. காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

விஜய்க்கு நன்றி

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் சக்கரவர்த்தி கூறியதாவது; முதல் அமைச்சர் விஜய்யின் பெருந்தன்மையால் மாநிலங்களவை வாய்ப்பு கிடைத்துள்ளது. வாய்ப்பை வழங்கிய முதல் அமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க என் குரல் ஓங்கும். தமிழக மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் “ என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com