

சென்னை,
தமிழகத்தில் பிரபல நடிகராக இருந்து வந்த எம்.ஜி.ஆர்., 1953-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். அண்ணா மறைவுக்கு பிறகு 1969-ம் ஆண்டு அவருக்கு தி.மு.க.வில் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1972-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.
அடுத்த ஒரு வாரத்திலேயே, அதாவது அக்டோபர் 17-ந் தேதி அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அடுத்த 2 ஆண்டுகளில் (1974) கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்ல, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் மாற்றினார். 1977-ம் ஆண்டு நெருக்கடி நிலைக்கு பிறகு நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணி 36 இடங்களில் வெற்றி பெற்றது.
மார்ச் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், அதே ஆண்டு ஜூன் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஆனால், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றிவிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 142 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதாவது, முதல் சட்டசபை தேர்தலிலேயே முத்திரை பதித்தது.
எம்.ஜி.ஆரைப் போல் நடிகராக இருந்து முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ள த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய், தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். ஆட்சியை ஒரு பக்கம் அவர் கவனித்துக் கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் கட்சியின் வளர்ச்சியையும் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர். போல், தமிழக வெற்றிக் கழகத்தையும் தேசிய அளவில் கொண்டு செல்ல முதல்-அமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 'விஜய் மக்கள் இயக்கம்' வலுவாக செயல்பட்டு வருகிறது. அம்மாநிலங்களில் விஜய்க்கு கணிசமான ரசிகர்களும் இருக்கிறார்கள்.
எனவே, விஜய் மக்கள் இயக்கத்தை அப்படியே த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ மாநிலக் கிளைகளாக மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு தமிழகத்திற்கு வெளியே உள்ள தமிழ் மக்கள் மற்றும் விஜய் ரசிகர்களின் வாக்கு வங்கியை ஒருங்கிணைப்பதன் மூலம், த.வெ.க.வை ஒரு மாநிலக் கட்சியாக மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், வருங்காலத்தில் இந்திய அளவில் ஒரு முக்கிய தேசிய சக்தியாக நிலைநிறுத்த முடியும் என்றும் விஜய் நம்புகிறாராம்.
இதற்கான பூர்வாங்கப் பணிகள் பிற மாநில நிர்வாகிகளுடன் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு, அங்கு நடைபெறும் தேர்தல்களிலும் களம் இறங்க த.வெ.க. திட்டமிட்டுள்ளதாம்.