விஜய் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது: ராஜேந்திர பாலாஜி

அதிமுகவை குறைத்து பேசுவது விஜய்யின் வீழ்ச்சிக்கு முதல்படி என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மதுரை தவெக மாநாட்டில் விஜய் பேசியது விளையாட்டு தனமாக இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தினமும் ஒரு மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவர் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் கூட்டம் அலை, அலையாக வருகிறது. ஆனால் தவெக மாநாட்டிற்கு வந்தவர்கள் விஜய் பேசுவதற்கு முன்னே கலைந்து செல்ல தொடங்கி விட்டனர்.
அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிசாமி குறித்தும் விஜய் பேசியது சிறுபிள்ளைத்தனமானது. அதிமுகவுக்கு 54 வயது. இந்த கட்சியை குறைத்து பேசுவது விஜய்யின் வீழ்ச்சிக்கு முதல்படி. இதேபோல் தொடர்ந்து அவர் பேசினால் அவரை மக்கள் புறக்கணிப்பார்கள். எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை கண்டு ஆளும் திமுக மிரண்டு போய் இருக்கிறது.
மதுரை மாநாட்டில் யாரோ எழுதி கொடுத்த வசனத்தை விஜய் பேசி, நடித்துவிட்டு சென்று இருக்கிறார். விஜய் பேச்சில் அரசியல் கருத்துக்கள் ஏதும் இல்லை. எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க பாடுபடுவோம் என்று அண்ணாமலை கூறியது பாராட்டுக்குரியது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணியில் உள்ள பா.ஜனதாவும் அதிக இடங்களில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.






