விஜய்யின் பதவியேற்பு விழா தள்ளிப்போகிறதா? கவர்னர் அழைப்பு விடுப்பதில் தாமதம்

கவர்னர் தற்போது வரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் பதவியேற்பு விழா தள்ளிப்போகிறதா? கவர்னர் அழைப்பு விடுப்பதில் தாமதம்
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. நாளை விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றன.விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்றாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்கள் அந்த கட்சியிடம் இல்லை. எனவே, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அடுத்த 2 வாரங்களுக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை த.வெ.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.

த.வெ.க. தரப்பில் காங்கிரசிடம் ஆதரவு கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. காங்கிரஸ் ஆதரவு அளித்தால், 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே த.வெ.க.விற்கு உள்ளது. 118 என்ற மேஜிக் எண்ணிக்கையை பெற இன்னும் 5 இடங்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில், கவர்னரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சென்ற விஜய், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அதேநேரத்தில், விஜய்யை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மெஜாரிட்டிக்கான முழு பட்டியலை கொடுக்கவில்லை என்பதால், கவர்னர் அழைப்பு விடுப்பதை தாமதப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. பெரும்பான்மை உள்ள 118 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும் தருமாறு விஜய்யிடம் கவர்னர் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தனிப்பெரும் கட்சியாக இருந்தாலே வழக்கமாக கவர்னர்கள் அழைப்பு விடுப்பதே மரபாக உள்ளது. ஆனால், கவர்னர் தற்போது வரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com