ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் விஜய் சுற்றுப்பயணம்?

கோப்புப்படம்
2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் வியூகம் அமைத்து வருகிறது.
சென்னை,
நடிகர் விஜய் கடந்த 2024 பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டுமொத்த நாடுமே உற்று நோக்கி உள்ளது. திமுக - அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளுக்கும் போட்டியாக இந்த முறை தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்குகிறது.
இதன்படி 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் வியூகம் அமைத்து வருகிறது. தவெக கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தை பூத் கமிட்டி முதல் தலைமை நிர்வாகிகள் வரை வலுப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தை தஞ்சாவூரில் இருந்து விஜய் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், முதற்கட்டமாக 100 இடங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






